திருநெல்வேலி,
திருநெல்வேலியில் பைக் மீது காரை மோதவிட்டு மகனை படுகொலை செய்த கும்பல், தந்தையின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து நடுரோட்டில் வீசிவிட்டு சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரகுப்தன் மகன் காளிமுத்து (வயது 40), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், சின்னத்துரை(15), ஜெயராஜ்(5) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். காளிமுத்து தனது 2 மகன்களையும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, ரெட்டியார்புரத்தில் உள்ள ஒரு தோட்டத்து வேலைக்காகச் சென்றுவிட்டு நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது பின்னால் 3 பைக்குகள் மற்றும் ஒரு காரில் 9 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்தனர்.
இதனை காளிமுத்து அறியவில்லை. அவர்கள் மாதுடையார்குளம் அருகே வந்தபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், தங்களது காரால் காளிமுத்துவின் பைக் மீது வேண்டுமென்றே பலமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்டதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
விபத்து ஏற்படுத்தியதோடு நில்லாமல், காரில் இருந்தும், 3 பைக்குகளிலும் வந்த கும்பல் அரிவாள்களுடன் திபுதிபுவென இறங்கியது. கீழே படுகாயங்களுடன் கிடந்த காளிமுத்துவைச் சூழ்ந்த அக்கும்பல், அவரது 15 வயது மகன் சின்னத்துரையின் கண்முன்னே காளிமுத்துவின் தலையை கொடூரமாகத் துண்டித்துக் கொலை செய்தது.
தன் தந்தை மற்றும் தம்பி கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்டு சின்னத்துரை கதறி அழுதான். ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், சின்னத்துரையின் வலது காலிலும் அரிவாளால் வெட்டி, சரமாரியாக தாக்கியது. இதில் அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்தில் கொலையாளிகளின் கார் சேதமடைந்ததால், காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் பைக்குகளில் தப்பினர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்த அந்த கும்பல், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பை பகுதியில் மாநில நெடுஞ்சாலையின் நடுரோட்டில் காளிமுத்துவின் தலையை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த சிறுவன் சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலைக்கு இரு தரப்பினரிடையே நீடித்து வந்த பல ஆண்டுகாலப் பகைதான் காரணம் என தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த 2012-ம் ஆண்டு, குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இதே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவரை காளிமுத்து தரப்பினர் கொடூரமாகக் கொலை செய்து, அவரது தலையை துண்டித்து கரம்பை பகுதியில் வீசியிருந்தனர்.
அதற்கு பழிக்குப்பழியாகவே தற்போது பெருமாள் பாண்டியன் தரப்பினர் இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றியுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் பகை ஓயாததால் காளிமுத்து வெளியூரில் வசித்து வந்தார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதைக் கண்காணித்த எதிர்த்தரப்பு, சமயம் பார்த்து இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது.
காளிமுத்துவின் தலையைத் துண்டித்த கொடூர கும்பல், மூலச்சி கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த பெண்களிடம் துண்டிக்கப்பட்ட தலையைக் காட்டி, “பெருமாள் பாண்டியன் இறந்தது போல உங்கள் ஆளையும் கொலை செய்துவிட்டோம், பாருங்கள்” எனக் கூச்சலிட்டவாறே ஊர்வலமாகச் சென்றுள்ளனர். இதைக் கண்டு பெண்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகே கொலையாளிகள் தலையைக் கரம்பை பகுதியில் வீசிச் சென்றுள்ளனர். தப்பியோடிய அந்த கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 மாதங்களில் நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை சம்பவங்கள் பின்வருமாறு:
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த தங்ககணபதி (வயது 48) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரின் உறவினர் மூக்கன்(50) ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 2-ந்தேதி நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் போதை கும்பல் நடத்திய வெறியாட்டத்தில், பெரும்பத்து இந்திராநகரை சேர்ந்த ஜாண் (43), ஒடிசாவை சேர்ந்த திரினாத் கட்டா (50) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
நேற்று (2.7.2026) வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வல்லத்து நம்பிகுளத்தில், பைக்கில் சென்ற கல்லிடைக்குறிச்சி மூலச்சி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(40), அவரின் 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் காரை மோதவிட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இதில் காளிமுத்துவின் தலையை அந்த மர்ம கும்பல் வெட்டி நடு ரோட்டில் வீசிவிட்டு சென்றது.