தமிழக செய்திகள்

"சமூக மாற்றத்தின் வழிகாட்டி" - இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அண்ணாமலை பதிவு

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளான ஜூலை 7-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பத்திரிகையாளரான இரட்டைமலை சீனிவாசன், கல்வி உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்காக சட்டமன்றத்திலும், பொதுவாழ்விலும் தொடர்ந்து குரல் கொடுத்தார். மேலும், வட்டமேசை மாநாடு மற்றும் பூனா ஒப்பந்தம் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் முக்கிய பங்காற்றினார். அவரது பிறந்தநாளான ஜூலை 7-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சமுதாயச் சிந்தனையாளராக, ஊடகவியலாளராக, அரசியல் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காகவும், பஞ்சமி நிலங்களின் மீட்பிற்காகவும் அயராது போராடிய மாமனிதர் ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய இலட்சியங்களுக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தளர்வின்றி பாடுபட்ட அவரது தன்னலமற்ற சேவையும், சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நமது வழிகாட்டியாக நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.