தமிழக செய்திகள்

ஆசனூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம்

யானைகள் ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கின.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சகரகங்களிலும் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சைாலக்கும், மற்ற வனப்பகுதி கிளை சாலைகளுக்கும் வந்து விடுகின்றன.

யானை கூட்டம்

இந்தநிலையில் நேற்று ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் திடீரென குட்டியுடன் யானைகள் ரோட்டை கடந்தன. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும், வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். சிலர் வாகனங்களில் இருந்தபடியே யானை கூட்டத்தை வீடியோ எடுத்தனர். யானைகள் ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதும் வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கின.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிளை சாலைகளில் அடிக்கடி யானைகள் கடந்து செல்கின்றன. அதனால் வாகனத்தில் செல்பவர்கள் மெதுவாக செல்லவேண்டும். செல்பி எடுப்பதற்காக அருகே செல்லக்கூடாது' என்று எச்சரித்துள்ளனர்.