சாலையை கடக்கும் யானைகள் 
தமிழக செய்திகள்

நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் கூட்டம்... பீதியடையும் வாகன ஓட்டிகள்

மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்கும் அங்குள்ள பழங்களை சாப்பிடுவதற்கும் வருவது வழக்கம்.

சென்னை,

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைகின்றனர்.

பலாப்பழ சீசன்

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், ஊட்டி, கெத்தை, சிறுமுகை மற்றும் சத்தியமங்கலம் போன்ற பகுதிகளுக்கு காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்கும் அங்குள்ள பழங்களை சாப்பிடுவதற்கும் வருவது வழக்கம்.

தற்போது பலாப்பழ சீசன் ஆரம்பித்துள்ளது. எனவே காட்டு யானைகள் தங்களின் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக நீலகிரியை நோக்கி படையெடுத்துள்ளன.

சாலையை கடக்க திணறிய யானைகள்

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறும்பாடி கிராமப் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க வருகின்றன. காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

சில யானைகள் வாகனங்களின் வருகையாலும், சத்தத்தாலும் சாலையை கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள்

எனவே வனத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்து யானைகளுக்கு சாலையை கடக்க உதவி செய்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளைக் கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

எனினும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளைக் கண்டால் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்றும் யானைகளை அச்சுறுத்த வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

அபராதம்

யானையைக் கண்டு ஆர்வத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இதனைத் தவிர்க்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.