சென்னை,
கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி உறுதியோடு போராடியதன் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து வரும் நாடாகும்.
ஒவ்வொரு தேசிய இனத்தின் மொழி,பண்பாடு,வரலாற்று ரீதியான மனப்பாங்கு,பொருளாதார உரிமைகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து,வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மொழிவழி மாநிலங்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது.
கடந்த 1927 ல் காங்கிரஸ் கட்சியும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு புதிய ஆட்சியாளர்கள் மொழிவாரி மாநிலங்கள் அமைத்தால், நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலைந்துவிடும் என்ற காரணம் காட்டி, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதில் தயக்கம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலைக்குப் பிறகு போராட்டங்களை முன்னெடுத்தது.
இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கும் வகையில் மொழிவழி மாநிலங்களை உடனடியாக அமைக்க வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் அமைவதுதான் உண்மையான ஜனநாயகப் பரவலாக்கத்திற்கும், தேசிய இனங்களின் சமச்சீர் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று கம்யூனிஸ்ட்டுகள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட முதல் தலைமுறைத் தலைவர்கள் தமிழ்மொழி பேசும் பகுதிகளை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என போராடினர். மொழிவாரி மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற முறையில் ஐக்கிய கேரளா, விசாலாந்திரா, சம்யுக்த மகாரஷ்டிரா போன்ற முழக்கங்கள் நாடு முழுவதும் எதிரொலித்தது.
சம்யுக்த மகாராஷ்டிரா' இயக்கத்தில் எஸ். ஏ. டாங்கே முக்கியப் பங்காற்றினார். ஐக்கிய கேரளா போராட்டத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூத்திரிபாட் போன்ற தலைவர்கள் முன் நின்று போராடினர்.
விசாலாந்திரா போராட்டத்தில் பி.சுந்தரையா, ரவி நாராயணரெட்டி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் காந்தியவாதியான பொட்டி ஸ்ரீ ராமுலு போன்றோரும் முன் நின்றனர். இதில், பொட்டி ஸ்ரீ ராமுலு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தார். இதனால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியை அரசு அடக்குமுறையால் ஒடுக்கியது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பலர் உயிர் பலியானார்கள்
இந்தப் போராட்டங்களின் காரணமாக 1956 ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைகளுக்கு, ஆரம்ப நிலையில் இருந்தே கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இருப்பினும் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி உறுதியோடு போராடியதன் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பெயரை திருத்தி, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தியாகி சங்கர லிங்கனார் 76 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு உயிர் நீத்தார். மொழிவழி மாநிலங்கள் அமைய போராடியவர்களையும், அதில் உயிர் ஈகை செய்தவர்களையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நினைவு கூர்ந்து, புகழ் வணக்கம் செலுத்துகிறது.
மூத்த தலைமுறையின் போராட்டத்தாலும் தியாகத்தாலும் 1956 நவம்பர் 1-ல் தமிழ் நாடு பிறந்தது . தமிழ்நாடு பிறந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
மொழிவாரி மாநிலங்களை சிதைப்பது,அவற்றின் உரிமைகளை பறிப்பது,இந்தியாவின் பன்முகத் தன்மையை மறுத்து, ஒற்றை கலாச்சாரத்தை,மொழியை திணிப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துப் போராட அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.