சென்னை,
திருமணம் கடந்த உறவில் கணவன் இருப்பதை, மனைவிக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் ஒரு பெண் கடந்த 2010-ம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தையுடன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மக ளிர் கோர்ட்டு, ஆதாரம் இல்லை என்று கூறி கணவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சகோதரர் மேல்முறையீடு செய்தார்.
'தன் சகோதரியின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் முழு காரணம். 2008-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுத்தும், மேலும் 5 சவரன் தங்கநகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் கேட்டு என் சகோதரியை கொடுமை செய்தார்.
அதுமட்டுமல்லாமல், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பும் இருந்தது. இத னால்தான் என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். இதை மகளிர் கோர்ட்டு கருத்தில் கொள்ளாமல், அவரை விடுதலை செய்து விட்டது' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், "கணவர் திருமணம் மீறிய உறவில் இருந்தார் என்றே வைத்து கொண்டாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவு கீழ் அதை மனைவி மீதான கொடுமை என கருத முடியாது. மனைவியுடன் வாழ்ந்தபோது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்துக்கு மீறிய உறவு வைத்திருந்தது மட்டுமே அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாகக் கருத முடியாது.
வரதட்சணைக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதனால், கணவரை கீழ் கோர்ட்டு விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று தீர்ப்பு அளித்துள்ளார்.