சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. புதிய மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது. பட்டும்படாமல் தேர்தல் களத்தில் அண்ணாமலை பணியாற்றினார். அ.தி.மு.க.விடம் 27 இடங்களை கேட்டு வாங்கிய பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியை தழுவினர். நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 11 சதவீத வாக்கு, 2 சதவீதமாக குறைந்து போனது.
இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் பா.ஜ.க.வில் இருந்து ராஜினாமா செய்கிறார், புதிய கட்சியை தொடங்குகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் ரெக்கை கட்டி பறந்தது. அதற்கேற்ப தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்க கடிதத்தையும் அளித்தார். தொடர்ந்து. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அண்ணாமலையிடம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருக்கவும் என்று கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும், அண்ணாமலை தன்னுடைய ராஜினாமா முடிவில் சற்றும் பின்வாங்க போவதில்லை என்ற உறுதியோடு இருந்ததாக சொல்லப்பட் டது.
இந்த சூழலில், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வர வேண்டும் என்று தேசிய தலைமை உத்தரவிட்டது. பா.ஜ.க.வின் அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் தமிழக அரசியல் களமும், தமிழக பா.ஜனதாவும் பெரும் அதிர்வை கண்டது. அண்ணாமலை மத்திய தலைமையிடம் தெரிவித்த புகாரின் அடிப்படையிலே நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார் என்ற தகவல் கசிந்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய தகவல் ஒன்று வெளியானது. அதில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை, தனிக்கட்சி ஒன்றை புதிதாக தொடங்க இருப்பதாகவும், அது மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சியாகவும், தமிழ்நாட்டை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய கட்சியாகவும் இருக்கும் என்றும், முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே அந்த கட்சி செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சூழலில் புது கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் விலகலை பா.ஜ.க தலைமை தற்போது உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமையகப் பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அவர்கள், தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் பரபரப்பாக செயலாற்றிக் கொண்டிருந்த அண்ணாமலையின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.