தமிழக செய்திகள்

சிதம்பரத்தில் சாலையில் சென்றவர்களை மது போதையில் தாக்கிய 6 பேர் கும்பலால் பரபரப்பு

சிதம்பரத்தில் ரமலான் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற ஒருவரை மதுபோதையில் 2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென கண்மூடித்தனமாக சரமாரியாக அடித்து தாக்கினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவை சேர்ந்த சகாபுதீன் மகன் ஜமால்முகமது (வயது 36). இவர் நேற்று நள்ளிரவில் ரமலான் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது மதுபோதையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென நடந்து வந்த ஜமால்முகமதுவை கண்மூடித்தனமாக சரமாரியாக அடித்து தாக்கினர். மேலும் அந்த பகுதியில் நடந்து வந்தவர்களையும் துரத்திச் சென்று தாக்கினர். இதைப் பார்த்த சிலர் கூச்சலிட்டு சத்தம் போட்டதால் அங்கிருந்து அந்த 6 பேரும் தப்பி சென்றனர்.

இதுகுறித்து பலத்த காயமடைந்த ஜமால்முகமது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. பிரதீப் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட போலீசார் கொள்ளுமேட்டுத்தெரு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது சிதம்பரம் ஓமகுளம் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் மகன் அரவிந்தன்(19) மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து மது போதையில் தாக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர். மேலும் 5 சிறுவர்களை கடலூர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் ரோட்டில் சென்றவர்களை தாக்கிய சம்பவத்தில் சிறுவர்கள் ஈடுபட்டதால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.