மர்ம பொருள் 
தமிழக செய்திகள்

கடப்பாக்கம் அருகே கடலில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு

கரை ஒதுங்கிய அந்த பொருளின் ஒரு முனையில் சிவப்பு நிறமும், நடுப்பகுதியில் கருப்பு நிறமும் பூசப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரகுப்பம் கடற்கரையில் ராக்கெட் லாஞ்சர் போன்ற உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியதால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரகுப்பம் (ஆலம்பரைக் கோட்டை பகுதி) கடற்கரைக்கு வழக்கம் போல் மீனவர்கள் இன்று (புதன்கிழமை) காலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது கடற்கரை மணலில் சுமார் 7 அடி நீளமுள்ள நீளமான உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொருளின் வடிவம் - மீனவர்களின் சந்தேகம்

கரை ஒதுங்கிய அந்த பொருளின் ஒரு முனையில் சிவப்பு நிறமும், நடுப்பகுதியில் கருப்பு நிறமும் பூசப்பட்டிருந்தது. மேலும், அதன் ஒரு முனையில் மீன்பிடி வலை மற்றும் கயிறு போன்ற அமைப்பு சிக்கியிருந்தது. இதனைப் பார்த்த மீனவர்கள், கடலில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் ஒத்திகையின் போது ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் உதிரிபாகமாகவோ அல்லது சரக்குக் கப்பல்களில் இருந்து விழுந்த ஏதேனும் பாகமாகவோ இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

மர்ம பொருள் கரை ஒதுங்கிய தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர். இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், சூனாம்பேடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் யாரும் அந்த பொருளின் அருகே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்த போலீசார், அதனை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். இந்த பொருள் எங்கிருந்து வந்தது, இது வெடிபொருளா அல்லது ராக்கெட்டின் உதிரிபாகமா என்பதைக் கண்டறிய நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடற்கரையில் மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT