தமிழக செய்திகள்

“புதிய விமானநிலையம் தேவைதான்.. ஆனால்..” - திருமாவளவன் கூறியதென்ன..?

புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வருடத்துக்கு 3 சிலிண்டர்கள் மற்றும் மாநகர, நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிவித்ததோடு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாகவும் அவர் அறிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம்

இது குறித்து முதல்-அமைச்சர் விஜய் கூறுகையில், “பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கம்

அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட 'டர்மினல் 5' ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தற்போது நடைபெறும் 'டர்மினல் 3' கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும். டர்மினல் 5 பணிகள் நிறைவடைந்து, அது செயலாக்கத்துக்கு வந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்த படுவதோடு, பயணிகளின் போக்குவரத்து தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை உறுதி செய்யப்படும்'என்று தெரிவித்திருந்தார். த.வெ.க. அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பரந்தூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தேவையான வளர்ச்சி

இந்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். காடுகளை அழிக்க வேண்டிய நிலையும் நீர்நிலைகளை தூர்வார வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும். இருந்தபோதிலும் விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலமே மாநிலத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எனவே தமிழகத்துக்கு புதிய விமான நிலையம் தேவை. அதேவேளையில் பொதுமக்களின் இசைவை பெற்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமானநிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே புதிய இடத்தை தேர்வு செய்து பணிகளை முதல்-அமைச்சர் விஜய் விரைவுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.