சென்னை,
தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூர் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா( வயது 18) . இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்த நிலையில் கோகிலாவுக்கு கடந்த 24-ந்தேதி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கோகிலா நீண்ட நேரம் ஆகியும் கழிவறையை விட்டு வராததால் மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த கோகிலாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால், குழந்தையில் தலையில் காயம் இருந்ததை பார்த்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர், மருத்துவர்கள் இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை என வழக்குப்பதிவு செய்து தாய் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் ஆகாமல் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக கோகிலா தெரிவித்தார். மேலும், கோகிலா 17 வயதில் இருந்த போது அவரை காதலிப்பதாக கூறி தகாத உறவில் சந்தோஷ் என்ற இளைஞர் ஈடுபட்டுள்ளார். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சந்தோஷ் என்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.