சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி (அதாவது இன்று) தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மனித குலத்துக்கு ஆற்றும் மகத்தான சேவைக்காக டாக்டர்களின் பங்களிப்பை போற்றுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக இரவு பகல் பாராமல் உழைத்து சேவை செய்யும் அனைத்து மருத்துவ வல்லுனர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் சேவைகளையும், இந்தியாவில் மருத்துவ முன்னேற்றத்திற்கான அவர்களின் பெரும் பங்களிப்பையும் அங்கீகரிப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய மருத்துவர் தினத்தையொட்டி உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.