விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ள Revised Annual Planner 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable), சிறைக்காவலர் உள்ளிட்ட எந்தவொரு சீருடைப் பணியாளர் தேர்வும் நடத்தப்படாமல், அனைத்துத் தேர்வுகளும் 2027ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, காவல்துறையில் பணியாற்றும் இலக்குடன் பல ஆண்டுகளாகத் தீவிரமாகித் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களுக்குக் குறைந்தது ஓராண்டுக்காவது தளர்வு வழங்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
TNUSRB விதிகளின்படி, காவலர் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது தகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த ஏராளமான தேர்வர்கள், தேர்வு 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், 2027ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது வரம்பைத் தாண்டி தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர்கள், தேர்வை எழுதும் வாய்ப்பையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு முதல் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீண்டகால உழைப்பு வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு, 2026ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அடுத்த ஆண்டில் போட்டி மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெறுவதிலும் கூடுதல் தாமதம் ஏற்படும்.
எனவே, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த அனைவருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் TNUSRB தேர்வுகளுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும். தேவையெனில் இரண்டு ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்குவதையும் பரிசீலிக்க வேண்டும்.
அத்துடன், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 2026ஆம் ஆண்டிலேயே இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.