சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரப்படும் என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் தான்தோன்றித்தனமாகப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தேர்தல் பிரசாரத்தின் போது "தூய சக்தி" என்று மேடைக்கு மேடை வாயளந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் "மாற்று சக்தி" தவெகவின் லட்சணமா? சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடங்கி அமைச்சரின் இந்த பாசிச கருத்து வரை தமிழகத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் தவெகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
அன்று ஆட்சி அதிகார மமதையில், தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்துக்களின் உரிமையை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டதால்தான், திமுக படுகுழியில் தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வ வைக்கப்பட்டது! இந்த உண்மையை நன்கு உணர்ந்தாவது, இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச திட்டமேதும் இருந்தால், உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் கைவிட வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.