ஈரோடு,
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்ட மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஈரோடு மஞ்சளுக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. இந்தநிலையில் நடப்பாண்டில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டது.
மஞ்சள் சாகுபடி குறைந்ததாலும், விவசாயிகளிடம் மஞ்சள் இருப்பு குறைந்த காரணத்தாலும் தற்போது விலை கடுமையாக உயர தொடங்கி உள்ளது. இதனால் கடந்த 1-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17 ஆயிரத்து 969-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்று நடந்த ஏலத்தில் குவிண்டால் மஞ்சள் ரூ.23 ஆயிரத்து 601-க்கு ஏலம் போனது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரத்து 632 அதிகரித்து தற்போது ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 711 முதல் ரூ.23 ஆயிரத்து 601 வரையும் ஏலம் போனது. இதே போல் கிழங்கு மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.14 ஆயிரத்து 899 முதல் ரூ.21 ஆயிரத்து 379 வரையும் விற்பனையானது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு கூட்டுறவு விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்துக்கு மொத்தம் 1,840 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 877 மூட்டை மஞ்சள் விற்பனையானது. மஞ்சள் வரத்து குறைந்து வருவதால் வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.