சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (30.1.2026) தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் தூய்மை இயக்கத் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும். குப்பை மேலாண்மை சரியாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக, தூய்மை இயக்கம் திட்டம் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தூய்மை இயக்கம் சார்பில் முதற்கட்டமாக, சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பல்வேறு வகையான கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 12.1.2026 முதல் 25.1.2026 வரை நடைபெற்ற "குப்பைத் திருவிழா"வின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. குப்பைத் திருவிழாவில் 13,400 க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், 14,160 கழிவு ஒருங்கிணைப்பாளர்கள், 1.25 லட்சம் சுய உதவிக்குழுப் பெண்கள் பங்களிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,411 டன் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகள் பெறப்பட்டு நிலத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.
இதற்கு முன் 90,000 திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற கழிவு சேகரிப்பு இயக்கம் மூலமாக பெறப்பட்ட கழிவுகள் மற்றும் இக்குப்பைத் விழாவில் பெறப்பட்ட கழிவுகள் மூலமாக ரூபாய் 4 கோடியே 30 லட்சத்திற்கும் மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கழிவுகளைப் பிரித்து வழங்கி ஒன்றிணைந்து தூய்மையான தமிழ்நாட்டிற்கு தங்கள் பங்களிப்பை ஆற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஒவ்வொரு மாதமும் குப்பைத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி. ஷஜீவனா, உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.