திருவெறும்பூர், ஜூலை.3-
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் ஸ்டீபன்(வயது 11). ஜான்சன் ஏற்கனவே இறந்துவிட்டார். ஸ்டீபன் எச்.ஏ.பி.பி. தொழிற்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பெரிய சூரியூரில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஸ்டீபன் பயணம் செய்தார். காந்தலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது. அப்போது பஸ் ஜன்னலில் இருந்து கண்ணாடி கழன்று மாணவர் ஸ்டீபனின் கையில் விழுந்ததில், அவரது விரல் சிதைந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் எச்.ஏ.பி.பி. மருத்துவமனையில் ஸ்டீபன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்டீபன் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஸ்டீபனுக்கு விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் தையல் மட்டும் போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்டீபனின் மாமா வினோத் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.