தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை அமைக்க வேண்டும் - விசிக எம்பி ரவிக்குமார்

அதிக இடங்களை வென்ற கட்சியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

சென்னை,

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும், விசிக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் தவெகவிற்கு விசிக ஆதரவளிக்குமா என்ற கேள்வி உட்பட பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதிக்க வேண்டியது அரசியல் கட்சியின் கடமை. தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்த கூட்டணி ஆட்சி என்கிற முடிவை மக்கள் எடுத்து இருக்கிறார்கள். அதேபோல, பாஜகவிற்கு எதிரான முடிவையும் எடுத்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற ஆட்சிக்கும் கூட்டணி ஆட்சிக்கும் ஆன முடிவாக இது இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் ஆதரவை கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் வந்திருக்கிறது. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை திருமா அறிவிப்பார். அதிக இடங்களை வென்ற கட்சியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அந்த வகையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகம் உரிமை கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை. அதை கவர்னர் பின்பற்றுவார் என எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலிலே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். யாருக்கு ஆதரவு என்கிற முடிவை திருமாவளவன் முடிவை கூறுவார்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவோடு தமிழக வெற்றிக் கழகம் சேர்வது தான் சரியாக இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக அமையும். திமுக எப்படி மதச்சார்பற்ற கொள்கை நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறதோ அதேபோன்று தான் தமிழக வெற்றிக் கழகமும் கொள்கை எதிரி என பாஜகவை கூறியிருக்கிறார்கள். இந்தசூழலில், கொள்கை எதிரி என கூறிய கட்சி, கூட்டணி கட்சியாக சேர்க்க முடியாது. விஜய் அவ்வாறு செய்ய மாட்டார் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.