தமிழக செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்த நல்லபாம்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது நுழைவுவாயில் அருகே உள்ள தண்ணீர் டேங்க் அருகே சிறிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நல்லபாம்பு பிடிபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கொக்கிரக்குளத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மனு கொடுக்க வருவார்கள். அப்போது தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பிற்காக பகல் முழுவதும் நுழைவுவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது வழக்கம்.

பிடிபட்ட நல்லபாம்பால் பரபரப்பு

நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தபோது நுழைவுவாயில் அருகே உள்ள தண்ணீர் டேங்க் அருகே சிறிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதை கவனித்த போலீஸ்காரர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியோடு பெரிய கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது கொடிய விஷமுள்ள நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாம்பு பிடிபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT