தமிழக செய்திகள்

செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு!

இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலையை படிப்படியாக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை 68 கி.மீ. தூரத்துக்கு சாலையை விரிவாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சென்னை - கன்னியாகுமரி ஜி.எஸ்.டி. சாலை விளங்குகிறது. தற்போது 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலையை படிப்படியாக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

68 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம்

இந்த நிலையில், சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான 68 கி.மீ. தூரத்தை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேம்பால பணிகள் முடிந்த பிறகு தொடக்கம்

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால், முதற்கட்டமாக இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கிடையே, ஜி.எஸ்.டி. சாலையில் தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்ட பிறகே 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம்

செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான 6 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, சென்னை - கன்னியாகுமரி சாலையின் மற்ற பகுதிகளிலும் விரிவாக்கப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT