தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக செயலி

பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

பெரம்பூர் தொகுதி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை எதிர்த்து போட்டியிட்டு 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதியை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதால், அவர் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறார். முதல்0அமைச்சர் விஜய் பதவியேற்று 50 நாட்களை கடந்தும், இதுவரை தனது சொந்த தொகுதியான பெரம்பூர் பக்கமே வரவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது . எனினும் கடுமையான நிர்வாக பணிகள் மற்றும் நேரமின்மை காரணமாகவே தொகுதிப் பயணங்களில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மொபைல் செயலி

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் தேவைகள், குறைகள், மற்றும் கோரிக்கைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் பிரத்தியேகமாக மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாலை, மின்சாரம் மற்றும் துப்புரவு போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த புகார்களை நேரடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

அளிக்கப்பட்ட புகாரின் நிலையை நேரடியாக அறிந்துகொள்ள உதவும் வகையிலான வசதிகளுடன் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி பெரம்பூர் தொகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் செயலியின் சிறப்பம்சங்கள்:-

* முதல்-அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்செயலியின் வாயிலாகப் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் அனைத்தும், நேரடியாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும்.

* இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் துப்புரவு போன்ற பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு, அவற்றின் தற்போதைய நிலை குறித்து மக்களுக்கு விரிவான பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பெரம்பூர் தொகுதியில் புதிதாக திறக்கப்படவுள்ள நவீன சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இந்த செயலிக்கான பிரத்யேக கண்காணிப்பு அமைப்பு செயல்படும்.

* தினமும் எத்தனை புகார்கள் வருகின்றன, அவை எந்தெந்த துறைகள் சார்ந்தவை என்பதைத் துல்லியமாகத் தனித்தனியாகப் பிரித்து கண்காணிக்கும் வகையில் ஒரு நவீன 'டேஷ்போர்ட்' அமைப்பும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்கிறார் விஜய்

தலைமைச் செயலகத்தில் மட்டுமே முதல்-அமைச்சர் அலுவலகம் இயங்கி வந்தாலும், பெரம்பூர் தொகுதி மக்களுக்காக ஒரு பிரம்மாண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (MLA Office) தயார் செய்யப்பட்டுள்ளது. இது முதல்-அமைச்சரின் சொந்த தொகுதி என்பதால், பொதுமக்கள் வசதியாகவும், நேரடியாகப் புகார்களை மனுக்களாக அளிப்பதற்கும் ஏதுவாகப் பல நவீன மாற்றங்களுடன் இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலி மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகிய இரண்டையும் அடுத்த வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் முறைப்படி திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நவீன செயலி, பெரம்பூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.