சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக அபிசெல்வி என்ற இளம்பெண், அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலின் ஆகியோரால் திட்டமிட்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இக்கொடூரத்தை மறைக்க, அந்தப் பெண் 'விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்' என நாடகமாடி, உடலை அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்ய முயன்ற குடும்பத்தினரின் செயல், சாதி வெறி மனிதநேயத்தை எவ்வளவு தூரம் மரத்துப் போகச் செய்யும் என்பதற்குச் சான்றாகும். காவல்துறையின் துரித விசாரணையால் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளித்தாலும், இதுபோன்ற சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் மிகக் கடுமையான, முன்மாதிரியான தண்டனை விரைந்து பெற்றுத்தரப்பட வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற ஆணவப் படுகொலைகளைத் தடுக்க 'தனி சிறப்பு சட்டம்' உடனடியாக இயற்றப்பட வேண்டும். மாற்றுச் சமூகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பிரிவுகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
சொந்த மகளின், தங்கையின் உயிரை விட சாதிப் பெருமைதான் பெரிது என நினைக்கும் இந்த பிற்போக்குச் சிந்தனை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மறுப்புக் காதல் மற்றும் திருமணங்களைச் சமூக ரீதியாகக் கொண்டாடுவதும், பாதுகாப்பதுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். சாதியற்ற, சமத்துவச் சமுதாயத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.