தமிழக செய்திகள்

பள்ளிப் பருவத்திலிருந்தே தூய்மையான தலைமுறையை உருவாக்க தனிக்குழு தேவை: ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தல்

காவல்துறையின் தீவிர நடவடிக்கைகளால் மட்டுமே இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்து விட முடியாது. அடுத்து உருவாகின்ற தலைமுறையை குற்றம் செய்வதற்கு அஞ்சுகின்ற தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும்.

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது நினைத்துப் பார்க்க முடியாத மனிதநேயமற்ற செயலாக பார்க்கின்றோம். காவல்துறை துரிதமாக செயல்பட்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்.

தமிழ்நாடு அரசு தன்னுடைய கடுமையான நடவடிக்கைகள் மூலம் மீண்டும் ஒரு குற்றம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொழுது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு குற்றவாளிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பிறகு தாமதமாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்படுகிறது. பிறகு எல்லோரும் அதை மறந்தே போகின்றோம். காவல்துறையின் தீவிர நடவடிக்கைகளால் மட்டுமே இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்து விட முடியாது. அடுத்து உருவாகின்ற தலைமுறையை குற்றம் செய்வதற்கு அஞ்சுகின்ற தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும்.

ஆலோசனை வழங்க தனிக்குழுவை முதல்-அமைச்சர் அவர்கள் அமைத்து பள்ளி கல்வி வயதிலிருந்து எப்படி ஒரு தூய்மையான தலைமுறையை உருவாக்க வேண்டுமென்று ஆலோசனைகளைப் பெற்று திட்டமிடப்பட வேண்டும். இதன் மூலமாகத்தான் இது போன்ற குற்றங்கள் சமூகத்தில் நடக்காமல் உறுதி செய்ய முடியும். அதை செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.