தமிழக செய்திகள்

தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

உடன் வந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மத்தூர்,

போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற திருப்பத்தூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

என்ஜினீயரிங் மாணவர்

திருப்பத்தூர் அருகே உள்ள மொலங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன், இவருடைய மகன் திலீப் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது தந்தை மற்றும் மொலங்காரம்பட்டியை சேர்ந்த கிராம குழுவோடு விநாயகர் சிலையை கரைக்க போச்சம்பள்ளி அருகே உள்ள தென்பெண்ணை மஞ்சமேடு பகுதிக்கு வந்தார்.

ஆற்றில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது. அங்கு ஏற்கனவே பழைய பாலம் இடிக்கப்பட்ட இடத்தில் சரிவர அகற்றப்படாமல் இருந்த கான்கிரீட் கம்பிகள் மற்றும் சிமெண்டு இடிபாடுகளில் திலீப் எதிர்பாராமல் சிக்கிகொண்டார். இதனால் ஆற்றின் நீரில் மூழ்கிய அவரை, உடன் வந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் திலீப் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT