திருச்சி ஜங்ஷன் அருகே தையல் தொழிலாளியை தாக்கி செல்போனை பறித்ததாக 4 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜ்மீர் (வயது 27). தையல் தொழிலாளியான இவர் ராமநாதபுரத்தில் இருந்து நேற்று திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து ரெயில் மூலம் சேலம் செல்வதற்காக ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே காத்திருந்தார். இரவு 8 மணிக்கு ரெயில் புறப்படும் என்பதால் நேற்று மாலை 5 மணிஅளவில் அவர் பாரதியார்சாலையில் ரெயில்நிலைய 2-வது நுழைவுபாதை அருகே சாலையோரம் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்று உள்ளனர். அவர் தர மறுத்ததால் அவரை சரமாரியாக தாக்கி வாயில் எட்டிஉதைதனர். இதில் அவருக்கு வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றனர். உடனே அவர் ஓடி சென்று ஜங்ஷன் அருகே நின்ற பொதுமக்களிடம் இது குறித்து கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த பகுதியினர் ஓடி வந்து அந்த 4 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
4 பேர் மீது சரமாரி தாக்குதல்
இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. ஒரு சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டோன்மெண்ட் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு வந்து 4 பேரையும் பிடித்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று மாலை அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "திருச்சி ஜங்ஷன் பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பதற்காகவே ஒரு கும்பல் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கிறது. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்கள்.