தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ. மகனுக்கு சொந்தமான கல்குவாரிக்கு சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 5 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பகுதியில், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி மகன் விமலாதித்தன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

இந்த கல் குவாரிக்கு தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளரான திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது 45) உள்பட 5 பேர் நேற்று சென்று, டிரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்றதாகவும், அப்போது ஒரு கும்பல் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கதிரவன் குளித்தலை போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, விமலாதித்தன் தரப்பிலும் குளித்தலை போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், கல்குவாரி தொடர்பாக பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 5 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.