தமிழக செய்திகள்

சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக இளைஞர் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சென்னை,

சிங்கப்பூரில் உயிரிழந்த சிவகங்கை மாவட்ட இளைஞர் ஸ்டீபன் ராஜாவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அவரது உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் பணி

இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், அரணையூர் அருகேயுள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் - ஆரோக்கிய சீலா இணையரின் மகன் ஸ்டீபன் ராஜா, சிங்கப்பூரில் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மகனை இழந்து துயருறும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஸ்டீபன் ராஜா, ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்து, பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த 11.11.2026 அன்று அவர் காணாமல் போனதாக, பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மகனைக் கைப்பேசி வழியாகத் தொடர்புகொள்ளப் பெற்றோர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் நேரில் சென்று விசாரித்தபோது, அவருடன் பணியாற்றியவர்கள் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், 13.11.2026 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

விசாரணை

விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய தங்கள் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கும் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? அவர் கடைசியாக எப்போது, எங்கு காணப்பட்டார்? அவர் காணாமல் போனது எப்போது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது? அவரது உயிரிழப்புக்கான காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு முழுமையான விசாரணை மூலம் விடையளிக்க வேண்டியது அரசுகளின் கடமை.

எனவே, இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, ஸ்டீபன் ராஜாவின் உயிரிழப்பு குறித்து முழுமையான விசாரணை நடைபெறச் செய்ய வேண்டும். உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் குடும்பத்தினருக்குப் பெற்றுத்தருவதோடு, விசாரணையின் முன்னேற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உயிரிழப்பில் குற்றச்செயல் ஏதும் நடந்தது விசாரணையில் தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

வலியுறுத்தல்

மேலும், ஸ்டீபன் ராஜாவின் உடலை அரசுச் செலவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, அவரது பெற்றோரிடம் விரைந்து ஒப்படைக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய நிலுவை, காப்பீட்டுத் தொகை மற்றும் சட்டப்படி உரிய இழப்பீடு ஆகியவற்றைப் பெற்றுத்தர வேண்டும். மகனை இழந்த குடும்பத்துக்கு மத்திய அரசு உரிய துயர்துடைப்பு நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் நலத்துறை மூலம் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

தங்கள் மகனின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக் காத்திருக்கும் பெற்றோரை மேலும் காக்க வைக்காமல், மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாகச் செயல்பட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT