ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் சிலை இருப்பதாக வேல்முருகன் என்ற போலீஸ்காரர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையில் உள்ள அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ் சமணர்கள் அச்சிற்பத்தை உள்ளூரை சேர்ந்த கருப்பணன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பாதுகாக்க ஏற்பாடு செய்தனர். இதை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றி கூறியதாவது:-
இந்த சிற்பம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பெருவழியில் புல்லக்கடம்பன், புல்லூர், மேலஅரும்பூர், புல்லுக்குடி, புல்லங்குடி, கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர், மாறந்தை ஆகிய ஊர்களிலும், திருப்புல்லாணியில் இருந்து மதுரை, கேரளா செல்லும் பெருவழியில் கீழச்சீத்தை, கீழச் சாக்குளம், பசும்பொன், கமுதி ஆகிய ஊர்களிலும், ராமநாதபுரம் மதுரை பெருவழியில் மஞ்சூர், கலையூர், அருங்குளம், சூடியூர் ஆகிய ஊர்களிலும், தொண்டியிலிருந்து ஆனந்தூர் வழியாக மதுரை செல்லும் பெருவழியிலும் சமண மதம் பரவி இருந்த தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன.
இம்மாவட்ட பெருவழிகள் அடுத்த மாவட்டங்களில் தொடரும்போது அப்பகுதியிலும் சமணத்தடயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலத்தூவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத்தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவர் தலையின் மேல் முக்குடை அமைப்பும், பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன. இரு சாமரதாரிகள் இருபுறமும் உள்ளனர். முக்குடை சமண சமய சின்னம் ஆகும். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாக கருதலாம்.
பல இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான பள்ளிகள் தான் இருந்துள்ளன. அத்தகைய ஒரு சமணப்பள்ளி இவ்வூரில் இருந்துள்ளது. இங்குள்ள திடலில் இரும்பு காலத்தை சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் 20 ஏக்கர் பரப்பளவில் சிதறி கிடக்கின்றன. எனவே, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு காலம் முதல் இவ்வூர் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இது ஆதாரமாக உள்ளது என கூறினார்.