சென்னை,
ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த 'ஐபோன் டியோ' போன்களில் அடுத்தடுத்து பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் புகார்கள் குவிந்து வருகின்றன.
"போச்சா... எல்லாம் போச்சா..." என்று வடிவேலு பாணியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள். ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனான 'ஐபோன் டியோ' போன்களில் அடுத்தடுத்து பல்வேறு கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் புகார்கள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் இதன் ஆரம்ப விலையே சுமார் ரூ.2,99,900 (சுமார் 3 லட்சம் ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலர், அதன் உள் திரை தரமாக இல்லை என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, போனை மடித்துப் பயன்படுத்தும் நடுப்பகுதியில் செங்குத்தாக விரிசல்கள் ஏற்படுகின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பயனர், போனை வாங்கி 6 மணி நேரத்திற்குள்ளும், 20 முறை கூட மடிக்காத நிலையிலும் மர்மமான முறையில் டிஸ்பிளேவில் விரிசல் விழுந்ததாக தெரிவித்துள்ளார்.
திரையில் விரிசல் விழுவது மட்டுமின்றி, பல பயனர்களுக்கு திரையின் வலது பக்கத்தில் பிரகாசமான வெள்ளைக் கோடுகள் தோன்றுவதாகவும், தொடுதிரை வேலை செய்யவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. சிலருக்கு போனை அன்-பாக்ஸ் செய்த சில மணி நேரங்களிலேயே டிஸ்பிளே முழுமையாக கறுப்பு நிறமாக மாறி செயலிழந்து போயுள்ளது. மேலும் போனை மடித்துத் திறக்கும் போது ஒருவித 'மடமட' என்ற சத்தம் கேட்பதாகவும் பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரபல தொழில்நுட்ப பழுதுநீக்கு நிறுவனமான iFixit நடத்திய ஆரம்பக்கட்ட சோதனையில், போனின் மடிப்புப் பகுதிக்கு அடியில் இருக்கும் ஒரு சிறிய சப்போர்ட் பார், போனை மடிக்கும்போது சரியாக விலகிக் கொள்ளாமல் டிஸ்பிளேவின் மீது அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுப்பதே இந்த திடீர் விரிசல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கணித்துள்ளது.
ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கிய போன் வாங்கிய சில நாட்களிலேயே பாழாய்ப் போகிறதே என்று பயனர் மத்தியில் அதிருப்தி நிலவிய நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்த விவகாரத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது. இதுபோன்ற கோளாறுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆப்பிள் கேரைத் தொடர்பு கொண்டு தங்களது பழுதடைந்த போன்களுக்கு மாற்றாக புதிய போன்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
சென்னையிலும் ஒரு வாடிக்கையாளர் இவ்வாறான கோளாறுக்கு மாற்றுப் போனைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு பெரிய பிராண்ட் மற்றும் இத்தனை லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரீமியம் போனில், ஆரம்பக்கட்டத்திலேயே இப்படிப்பட்ட குளறுபடிகள் ஏற்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.