மதுபாட்டில்கள் 
தமிழக செய்திகள்

ஆவடியில் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

இந்த விபத்தில் லாரியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை,

சென்னை ஆவடி அருகே சுமார் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் உட்பட 4 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி

மதுபான ஆலையிலிருந்து சுமார் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) சரக்கு லாரி ஒன்று சென்னை ஆவடி வழியாகச் சென்று கொண்டிருந்தது. ஆவடி பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த விபத்தில் லாரியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கவிழ்ந்து கிடந்த லாரியிலிருந்து மதுபாட்டில்கள் சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்திற்கான சரியான காரணம் குறித்து ஆவடி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT