தமிழக செய்திகள்

தமிழக அரசியலில் தினம் ஒரு திருப்பம்: எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் இதற்கு முன்பு நடந்தது இல்லையா? - பரபரப்பு தகவல்கள்

குறுகிய காலத்திற்குள் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

சென்னை,

தேர்தலில் ஓட்டுபோட்டதற்கு ஆதாரமாக வாக்காளர்களின் கை விரலில் வைக்கப்பட்ட கருப்பு மை அழிந்து போவதற்குள் தமிழக அரசியலில் என்னென்னமோ மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், புதிய அரசியல் வரவான த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.

கட்சி தாவல் தடை சட்டம்

அதே நேரத்தில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் பிளவுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேரும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து கூடுதல் பலத்தை சேர்த்தனர். இவர்களில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் வெளியே வராததால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அடுத்து என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதில் சிலர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

அதாவது, மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 3 பேரும் நேற்று தங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்திருக்கிறார். இன்னும் சிலர் இதேபோல், இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லையா?

தமிழக அரசியலில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை போல், இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லையா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம். ஏன் இல்லை, இதுபோன்ற அரசியல் நெருக்கடிகள் ஏற்கனவே தமிழகத்தில் நடந்திருக்கிறது.

2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றினாலும், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றிருந்தது. ம.தி.மு.க. சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, 2009-ம் ஆண்டு கம்பம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கம்பம் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த தே.மு.தி.க.

அதேபோல், அ.தி.மு.க சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணனும், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதேபோல், 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 29 இடங்களை கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. ஆனால், பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சில தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களே அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர். ஒரே நேரத்தில் 8 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழந்தது.

பண்ருட்டி ராமச்சந்திரன்

அதன்பின்னர், 2013-ம் ஆண்டு தே.மு.தி.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், அக்கட்சியைவிட்டு விலகி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார்.

இவ்வளவு ஏன், கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகிய மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் அதே தொகுதிகளில் போட்டியிட்டு 3 பேரும் வெற்றி பெற்றனர்.

குறுகிய காலத்தில் இதுவே முதல்முறை

இப்படி, ஒவ்வொரு கால கட்டத்திலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. ஆனால், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.