நீலகிரி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானை கள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன குற்றங்களை தடுப்பது தொடர்பான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு குதிரைப்பாறை வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆனால், யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் ராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் தெப்பக்காடு வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தினர். அப்போது இறந்த பெண் காட்டு யானைக்கு 50 வயது இருக்கும் எனவும், வயது மூப்பு காரணமாக யானை இறந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இறந்த பெண் யானைக்கு 50 வயது இருக்கும். மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை நாளை (அதாவது இன்று) நடைபெறும். அதில் யானையின் உடலில் உள்ள முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அறிக்கை கிடைத்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்றனர்.