தமிழக செய்திகள்

குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண் திடீர் உயிரிழப்பு.!

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முதல் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டது. எனவே அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வாரவிடுமுறையை யொட்டி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வாகனங்களில் குளிக்க வந்தனர்.

சேலம் கியாஸ் கம்பெனி மோசிக்கனார் வீதியைச் சேர்ந்த ஜாபர் மனைவி பரிதாள்பீவி (வயது 51) என்பவரும் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு குளிக்க வந்தார். அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்தனர். பரிதாள்பீவி உள்ளிட்டவர்கள் பெண்கள் குளிக்கும் பகுதியில் குளித்தனர். அப்போது பரிதாள்பீவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருவிக்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூலமாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அருவிக்கரைகளில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.