தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறை பகுதியைச் சேர்ந்தவர் யூனோக். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ஆலய பாதிரியார் சிவாகர் நடத்தி வைத்தார்.
கடந்த மே மாதம் யூனோக் கப்பல் பணிக்கு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 20-ந் தேதி அவர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது யூனோக்கின் மனைவிக்கும். பாதிரியார் சிவாகருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சிலர் கூறினார்கள். இதை கேட்டு யூனோக் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பாதிரியாரை தேடி அவரது வீட்டிற்கு யூனோக் தனது உறவினர்கள், நண்பர்கள் சிலருடன் சென்றார். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊர்த்தலைவர், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் யூனோக் தரப்பை சேர்ந்த 5 பேர் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் எப்படி பாதிரியார் வீட்டில் பொருட்களை சேதப்படுத்தலாம் எனக்கூறி யூனோக் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரது பாட்டி, தங்கையை அவதூறாக பேசி பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக யூனோக் ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். அதில் சிங்கித்துறையை சேர்ந்த 12 பேர் மிரட்டல் விடுத்து பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிவித்து இருந்தார்.
இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாதிரியாரும், யூனோக் மனைவியும் செல்போனில் பேசும் ஆடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.