தமிழக செய்திகள்

மனைவியை பிரிந்த மன வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தூத்துக்குடி பாத்திமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த அந்தோணி கமல்ராஜ் மகன் லேசிங்டன் கமல்ராஜ் (வயது 33). கூலித் தொழிலாளியான இவருக்கு ஷைனி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த லேசிங்டன் கமல்ராஜ் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது லேசிங்டன் கமல்ராஜ் நைலான் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லேசிங்டன் கமல்ராஜின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.