தமிழக செய்திகள்

திருமணமான 5 மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீமதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

போரூர்,

சென்னை மதுரவாயல், அடுத்த ஆலபாக்கம் அஷ்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகன் மணிகண்டன் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீமதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். காதல் மனைவி பிரிந்து சென்றதால் மணி கண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். அவர், தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து "எல்லோரும் என்னை விட்டு போய் விட்டனர். நான் சாகப் போகிறேன்" என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.

தூக்கு போட்டு தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மணிகண்டன் வீட்டின் அருகே வசித்து வருபவர்களுக்கு இதுபற்றி தகவல், தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மணிகண்டன் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் மணிகண்டன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.