தமிழக செய்திகள்

மின்சார துண்டிப்பை சாக்காக வைத்து இரவில் அடுத்தவர் மனைவியை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்

மணி அயர்ந்து தூங்கி விட்டார் என நினைத்து, மணியின் வீட்டிற்குள் புகுந்தார்.

கோவை,

கோவை அருகே அடுத்தவர் மனைவியை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தைச் சேர்ந்தவர் மணி(வயது 40). இவர் கோவை சாய்பாபா காலனி அடுத்த கோவில்மேடு பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர் அந்த பகுதியில் தனது 2 மனைவிகளுடன் தங்கி வசித்து வருகிறார்.

மணி கட்டிட வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால், கூனிமூக்கு பகுதிக்கு சென்று, அங்கு வேலைக்காக காத்திருப்பவர்களை சம்பளம் பேசி அழைத்து செல்வது வழக்கம்.

கட்டிபிடித்தார்

அதன்படி நேற்று காலை மணி கட்டிட வேலைக்கு ஆட்கள் அழைப்பதற்காக கூனிமூக்கு பகுதிக்கு வந்தார். அப்போது. அங்கிருந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காத்திருந்தார். அவரிடம் மணி, சம்பளம் பேசி வேலைக்கு அழைத்துச்சென்றார். பின்னர் நேற்றுமாலை வேலை முடிந்ததும் மணி அந்த வாலிபரை தனது வீட்டிற்கும் அழைத்து சென்றார். அப்போது இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனை சாக்காக வைத்துக்கொண்டு அந்த வாலிபர் திடீரென மணியின் மனைவியை ஆசை தீர கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சியான மணி, அந்த நபரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அதன்பின்னர் மணி இரவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் படுத்து தூங்கினார்.

சில்மிஷம்

இந்த நிலையில் அந்த வாலிபர் மின்சாரம் துண்டிப்பை சாக்காக வைத்து கொண்டு மறுநாள் இரவில் மீண்டும் மணியின் வீட்டிற்கு வந்தார். அவர், மணி அயர்ந்து தூங்கி விட்டார் என நினைத்து, மணியின் வீட்டிற்குள் புகுந்தார். பின்னர் மணியின் மனைவியிடம் வாலிபர் சில்மித்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த மணி பார்த்து விட்டார் எச்சரித்து அனுப்பிய பிறகும் மீண்டும் மீண்டும் வருகிறானே என்ற ஆத்திரத்தில் இரவில் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த மணி அருகே இருந்த கட்டையை எடுத்து வாலிபரை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வலி தாங்க முடியாத அவர் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அடித்துக்கொலை

வாலிபரின் உடலை எடுத்து சென்று தடாகம் ரோட்டில் வீசி விட்டு, எதுவும் தெரியாதது போல் மணி தனது வீட்டிற்கு வந்து விட்டார்.

நள்ளிரவில் அந்த வழியாக சென்றவர்கள் சாலையில் ஒருவர் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை பார்த்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று,

கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டனர்.

மணியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என விசாரித்தனர். அதற்கு அவர் அந்த வாலிபரின் பெயர், ஊர் தெரியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட அந்தவாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.