தமிழக செய்திகள்

டீக்கடையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு! 2 பேரை மடக்கிப்பிடித்த போலீஸ்காரர்

மேலகரத்தைச் சேர்ந்த கார்த்திக், சுடலை ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

தென்காசி,

தென்காசியை அடுத்த மேலகரம் தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுடலை மகாராஜா (வயது 22). மெக்கானிக்கான இவர் தற்போது மத்தளம்பாறை காமராஜர் தெருவில் வசித்து வருகிறார்.

இவருக்கும், மேலகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (19), சுடலை (20) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு முறை அவர்களுக்கு இடையே தகராறு நடந்த நிலையில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுடலை மகாராஜா, நன்னகரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அரிவாளால் சுடலை மகாராஜாவை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குற்றாலம் போலீஸ்காரர் செந்தில்குமார் விரைந்து சென்று, கார்த்திக், அவருடன் வந்த சுடலை ஆகியோரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். வாலிபரை அரிவாளால் வெட்டிய வரை துணிச்சலுடன் கைது செய்த போலீஸ்காரர் செந்தில்குமாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பாராட்டினார்.

SCROLL FOR NEXT