தூத்துக்குடி,
தூத்துக்குடி கோரம்பள்ளம், ஸ்ரீனிநகரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் அந்தோணி சேவியர் (வயது 28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், பிருந்தா(28) என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். பிருந்தா தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு பிருந்தா தனது பணிக்காக சுங்கச்சாவடிக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் திரும்பி வந்தபோது, அந்தோணி சேவியர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோணி சேவியரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன? குடும்ப பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.