சக்திவேல் 
தமிழக செய்திகள்

வனத்துறை அதிகாரியாக உயர்ந்து... 250 பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இளைஞர்

கடந்த 2023-ம் ஆண்டு நரிக்குறவர் சமூகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்,

பல்வேறு சமூக பாகுபாடுகள் மற்றும் விளிம்புநிலை சவால்களை எதிர்கொண்டு வரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர், டி.என்.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று வனத்துறை அதிகாரியாக சாதனை படைத்துள்ளார்.

பன்னாட்டு நிறுவனம் டூ அரசுப் பணி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஆரம்பத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வந்தார். "பசிப்பவனுக்கு மீன் பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு" என்ற பழமொழிக்கு ஏற்ப, தனக்குக் கிடைத்த பொருளாதார பாதுகாப்பைத் தாண்டி, தன் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க முடிவெடுத்தார். இதற்காக தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்து, அரசுத் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்தார். இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று வனத்துறை அதிகாரியாக சாதனை படைத்தார்.

250-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கல்வி- வீட்டு வசதி

சக்திவேல் அதிகாரியாக பொறுப்பேற்றதுடன் நின்றுவிடாமல், முறையான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் தவித்த தனது நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் மற்றும் கல்வி கற்பதற்கான கட்டமைப்பு உதவிகளை பெற்றுத் தந்துள்ளார். மேலும், தன் சமூகத்தைச் சேர்ந்த பிற இளைஞர்களும் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கு தேவையான டி.என்.பி.எஸ்.சி மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார்.

மாற்றத்தை நோக்கி ஒரு புதிய தலைமுறை

கடந்த 2023-ம் ஆண்டு நரிக்குறவர் சமூகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பிற்கு பிறகு, முறையான சான்றிதழ்கள் மற்றும் சக்திவேல் போன்றவர்களின் தீவிர வழிகாட்டுதலால் அச்சமூகத்தின் புதிய தலைமுறையினர் பல தலைமுறைகளாக தொடர்ந்த வேட்டை மற்றும் பாசி மணி விற்கும் தொழிலைத் தாண்டி, இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களாக உருவெடுத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT