தமிழக செய்திகள்

போலீசாக இருந்து ரவுடியாக மாறிய வாலிபர் - பரபரப்பு தகவல்

கார்த்தி என்பவர்தான் அந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு தனசேகரை கடத்தி உள்ளார்.

கோவை,

காங்கிரஸ் பிரமுகர் கடத்தல்

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 53), காங்கிரஸ் பிரமுகர். இவரை கடந்த 5-ந் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது. பின்னர் அவரை பாலக்காடு ரோட்டில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சியை சேர்ந்த வைரபெருமாளை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இடிகரையை சேர்ந்த போலீஸ் கார்த்தி, திருச்சியை சேர்ந்த அன்பு, மூர்த்தி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

கும்பல் தலைவன்

இதில் போலீஸ் கார்த்தி என்பவர்தான் அந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு தனசேகரை கடத்தி உள்ளார். ஆள் மாறாட்டத்தில் அவரை கடத்தி பாதி வழியில் இறக்கிவிட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தனசேகரை தெரிந்தே கடத்தி யதும், ஆனால் திடீரென்று அவரை இறக்கிவிட்டு சென்றதும் தெரியவந்து உள்ளது. எதற்காக அவர் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார்? என்பது தெரியவில்லை. தலைமறைவாக உள்ள போலீஸ் கார்த்தியை பிடித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என தெரிகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை அருகே உள்ள இடிகரையை சேர்ந்த கார்த்தி, கடந்த 2003-ம் ஆண்டு பட்டாலியன் பிரிவில் போலீசாக பணிக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு இளம்பெண்ணுடன் பழகி பணத்தை பறித்ததாக அவர் மீது புகார் வந்தது. இது தவிர மேலும் பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் அவர் கடந்த 2006-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அவர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். அவர் மீது போத்தனூரில் ஒரு கொலை வழக்கு, காட்டூர், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக காரை அடமானம் வைத்து பணம் பெறுபவர்களின் காரை திரும்ப கொடுக்காமல் விற்று பணம் சம்பாதிப்பது, காரை திருடுவது, சிறையில் இருந்து வெளியே வரும் பிரபல ரவுடிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அடிக்கடி குற்ற செயலில் ஈடுபடுவது என ரவுடி போல வலம் வந்து உள்ளார்.

அதுபோன்று காரை அடமானம் வைப்பது தொடர்பாகதான் காங்கிரஸ் பிரமுகருக்கும், போலீஸ் கார்த்திக்கும் இடையே பிரச்சினை இருந்தது. இதனால்தான் அவரை கடத்தி உள்ளனர். எனவே தலைமறைவாக இருக்கும் போலீஸ் கார்த்தியை பிடித்தால்தான் முழு விவரமும் தெரியவரும். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தலைமறைவான 5 பேரையும் பிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.