சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூரில் காதலன் திருமணத்துக்கு பதில் அளிக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் காதலன் கைதானார்.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப் பின் 9-வது மாடியில் வசித்து வருபவர் வருண் பாலாஜி (வயது 31). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இதே மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் (வயது 24) என்ற இளம்பெண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் வருண் பாலாஜிக்கும், பர்வீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே, பர்வீனின் உறவினர்கள் புதுப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்ததால், பர்வீனும் அங்கு சென்றார். இருப்பினும், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தங்களது காதலை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சோழிங்கநல்லூரில் உள்ள வருண் பாலாஜியின் வீட்டுக்கு சென்ற பர்வீன், தங்களது திருமணம் குறித்து கேட்டார். அதற்கு வருண் பாலாஜி எந்த பதிலும் கூறாமல் மவுனம் சாதித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பர்வீன், திடீரென 9-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார், பர்வீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வருண் பாலாஜியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.