தமிழக செய்திகள்

பைக்கில் சென்ற இளம்பெண் மீது கார் மோதல் - ராஜஸ்தானில் டிரைவர் கைது

போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

புதுடெல்லி,

சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை ராஜஸ்தானில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்த சிவானி சவுகான் என்ற இளம்பெண், சம்பவத்தன்று தன் நண்பர்களடன் குருகிராமுக்கு பைக் சவாரி சென்றார். திரும்பும் வழியில் கோல்ப் கோர்ஸ் சாலையில் வந்தபோது, காரில் வந்த ஒருவர் அவரை தள்ளிப்போகும்படி சொல்லிக்கொண்டே பைக்கை இடித்து தள்ளிவிட்டு சென்றார். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சிவானிக்கு காயம் ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதை கவனித்த அவரது தோழி ஒருவர் அந்த காரை விரட்டிச் சென்று நிறுத்தினார். அப்போதும் அந்த நபர் வாக்குவாதம் செய்துவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றார். பைக்கில் பொருத்தியிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவானதால், சிவானி சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டார். இதை கவனித்த போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில், ராஜஸ்தானில் நேற்று, சிவானி மீது காரை மோதிய டிரைவர் கல்யாண் பைஸ்லாவை கைது செய்தனர். அவர் உடற்பயிற்சி கூடம் நடத்துபவர் என்று தெரியவந்துள்ளது. கார் ராணுவ அதிகாரி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவும், வேண்டுமென்றே மோதவில்லை என்றும் டிரைவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT