தமிழக செய்திகள்

கணவரின் மதுப்பழக்கத்தை நிறுத்துவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2.77 லட்சம் நூதன மோசடி..!

குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சக்திவாய்ந்த பொடி, கயிறு தருவதாக கூறி, இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார்.

நெல்லை,

கணவரின் மதுப்பழக்கத்தை நிறுத்துவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுப்பழக்கம்

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் டிரைவராக உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் இளம்பெண் முகநூல் பார்த்து கொண்டிருந்தபோது, 'பாண்டி அம்மாவின் வசியம் தந்திரம்' என்ற ஐ.டி.யின் லிங் வந்துள்ளது. அதில் சென்று பார்த்தபோது, குடிப்பழக்கத்தில் இருந்து மீட்பது, வசியம் செய்து கொடுக்கப்படும். என்று இருந்துள்ளது. மேலும் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.2.77 லட்சம் மோசடி

அந்த எண்ணில் தொடர்பு கொண்டு இளம்பெண் பேசியபோது, மர்மநபர் பேசியுள்ளார். அவர் பாண்டி அம்மாவின் தொடர்பு எண் கொடுப்பதாக கூறி மற்றொரு செல்போன் எண் கொடுத்துள்ளார். அந்த எண்ணிற்கு பேசியபோது, பெண் ஒருவர் பேசியுள்ளார். அவர் இளம்பெண்ணின் குடும்ப விவரங்கள், கணவரின் குடிப்பழக்கம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சக்திவாய்ந்த பொடி, கயிறு, சக்திக்கல், செம்பு பட்டை போன்றவற்றை தருவதாக கூறி, இளம்பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

இப்படி பல காரணங்களைக் கூறி சுமார் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை மோசடியாக பெற்றுள்ளார். எனினும் அவர் சொன்னது போன்று எந்த பொடியும், கயிறும், சக்திவாய்ந்த கல்லும் அனுப்பவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த இளம்பெண் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT