தமிழக செய்திகள்

அஞ்சலகங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆதார் சேவை செயல்படும்: தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

புதிய ஆதார் பதிவு செய்யும்போது 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு செய்யப்படும் கைரேகை, கருவிழிப் புதுப்பித்தல் முற்றிலும் இலவசம் ஆகும்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் ஆதார் சேவை மையம் செயல்படும்.

வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காகவும், கோடை விடுமுறையில் பள்ளி செல்லும் குழந்தைகள் தங்கள் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை அஞ்சலகம் தவிர, தூத்துக்குடி கோட்டத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படுகின்றன:

ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர் மற்றும் படுக்கப்பத்து.

கட்டண விவரங்கள்:

புதிய ஆதார் பதிவு: இலவசம். 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது குழந்தைகளுக்கு செய்யப்படும் கைரேகை/கருவிழிப் புதுப்பித்தல் முற்றிலும் இலவசம். பெயர், முகவரி, வயது, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் திருத்தங்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும். புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவற்றை புதுப்பிக்க ரூ.125 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க புதுப்பிக்கப்பட்ட ஆதார் அவசியம் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலக ஆதார் மையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.