சென்னை,
பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், நேரு விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் இன்று சந்தித்து உரையாடினார்கள். அடிப்படை தேவைகள், கட்டமைப்பு வசதிகள் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தார்கள்.
ஒரு விளையாட்டு வீரனாக அனைத்தையும் பார்த்து வளர்ந்தேன் என்ற முறையில், வீரர்- வீராங்கனையர்களுக்கான தேவைகள் என்ன என்று உணர்ந்திருக்கிறேன். எனவே, முதலில் அதை சரிசெய்வேன்.
அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாடு விளையாட்டில் சாதிக்க வேண்டியவை குறித்த செயல்திட்டம், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு தேவையான முன்னெடுப்புகள், அனைத்து விளையாட்டுகளும் இடம்பெறும் விதமாக சீரமைக்கப்பட்டு உருவாக்கப்படும் ஒலிம்பிக் மைதானம், ஆரம்ப கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்த விளையாட்டை ஒரு தனி பாடமாக சேர்ப்பது ஆகிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.