தமிழக செய்திகள்

ஆவணி சுபமுகூர்த்தம்: திருத்தணி மலைக்கோவிலில் இன்று 65 ஜோடிகளுக்கு திருமணம்

அதிகாலை முதலே மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

திருவள்ளூர்,

ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 65 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், ஆடி முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை முதலே மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டது.

வேதமந்திரங்களும், கெட்டி மேளமும் முழங்க, பாரம்பரிய முறைப்படி சுமார் 65 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், திருத்தணி-அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.