சென்னை,
பனீர் உள்பட 100 பொருட்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக வெளியான தகவலுக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-
ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு விற்பனை நிலையங்களுக்கும், சில்லறை விற்பனை முகவர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஆவின் பால் பொருட்களுக்கு நுகர்வோரிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் வரவேற்ப்பைப் பிரதிபலிக்கிறது.
எனவே, ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். ஆவின் நிறுவனம், தரமான பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ந்து தயாரித்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப தடையின்றி வினியோகம் செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.