கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆவின் பால் விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும்- மு.வீரபாண்டியன்

பால் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை பெருமாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் நிறுவனம் தற்போது தினசரி 14.50 லட்சம் லிட்டர் பாலை பொதுமக்களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால் பொதுமக்கள் தேவை 15.50 லட்சம் லிட்டராகும். பல தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வந்தாலும் “ஆவின்” பால், தயிர் உள்ளிட்ட பொருட்களையே பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஆவின் “கிரீன் மேஜிக்“ பால் ஒரு லிட்டர் ரூ.44-க்கும் அரைலிட்டர் ரூ.22-க்கும் விற்பனை செய்வதால் பொதுமக்கள் பெரிதும் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு ஆவின் நிறுவனம் விநியோகித்து வரும் அனைத்து வகையான பால் அளவில் மொத்தம் சுமார் ஏழு விழுக்காடு வரை வெட்டிக் குறைத்துவிட்டது. அதிலும், குறிப்பாக மக்கள் விரும்பி வாங்கும் கிரீன் மேஜிக் பால் வகையில் 30 விழுக்காடு வரை குறைத்து, நுகர்வுச் சந்தையை தனியார் நிறுவனங்களிடம் தள்ளி விட்டு வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாக ஆவின் நிறுவனத்தின் விற்பனை சந்தை வட்டம் சுருங்கி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பால் விநியோக சங்கிலியின் இணைப்பாக விளங்கி வரும் முகவர்களை இழக்கும் நெருக்கடியும் உருவாகியுள்ளது.

பால் கொள்முதல் முனையில் குறைவு ஏற்படும் காலங்களில் ஆவின் நிறுவனம் மாற்று ஏற்பாடுகள் செய்து, தனது சந்தை வாய்ப்பை உறுதி செய்து, விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால், தற்போது, ஆவின் பால் நுகர்வோர் கிரீன் மேஜிக் பால் உட்பட தேவையான பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். நிலைமை மேலும் மோசமடையும் முன்பு, தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு, சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் பால் தேவைகளை பூர்த்தி செய்வதில் "ஆவின்" நிறுவனம் முழுமையாக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், பால் வளத்துறை அமைச்சரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.