தமிழக செய்திகள்

செவிலியர் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிடுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்

4 லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களில் ஒரு சதவீதத்தினரை மட்டுமே (4,724), அதுவும் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

லட்சக்கணக்கான இளைஞர்களின் நிரந்தர அரசுப் பணிக் கனவைச் சிதைக்கும் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செவிலியர் கல்லூரிகள்

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக, படித்த இளைஞர்களின் நிரந்தர அரசு வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைத்து, உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ‘7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்’ என அறிவித்துவிட்டு, கடந்த செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 261) மூலம் அரசு தனது பொறுப்பை அடியோடு கைகழுவியுள்ளது ஏற்புடையதல்ல. நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய அரசு செவிலியர் கல்லூரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாது என்றும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமே ரூ.270.27 கோடியைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருப்பது பெரும் நிர்வாகச் சீர்கேடாகும். பல்கலைகழகம் அந்த நிதியை எந்த வகையில் திரட்டும் என்கிற கேள்வி எழுகிறது. அந்த நிதி திரட்டலுக்கு மாணவர்கள் கட்டண உயர்வு மூலம் பலிகடா ஆக்கப்படுவார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

மேலும், இக்கல்லூரிகளுக்குத் தேவைப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவர் என்றும், அவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களோ ஓய்வூதியப் பலன்களோ கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று.

அரசாணை

அதேபோன்று, செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட அரசாணை (எண்: 258) மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களில் ஒரு சதவீதத்தினரை மட்டுமே (4,724), அதுவும் சொற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

"ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளில் ஒப்பந்த முறையைத் திணிப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல அரசே ஒப்பந்த முறையைப் புகுத்தி உழைப்பைச் சுரண்டினால், தனியார் துறையின் தொழிலாளர் உரிமை மீறல்களை அரசு எவ்வாறு தட்டிக்கேட்க முடியும்? இத்தகைய கொள்கைகளால் அரசு மருத்துவக் கட்டமைப்பு சீர்குலையும் சூழலே உருவாகும்.

வலியுறுத்தல்

எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளின் அரசாணைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். புதிய செவிலியர் கல்லூரிகளுக்குத் தேவையான முழு நிதியையும் அரசே ஏற்றுக்கொண்டு, செவிலியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணிகளாக உடனே நிரப்ப வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT